நபித்துவத்தின் தொடக்க நிலைகளில்
நபித்துவத்தின் துவக்கம்
அண்ணலாரின் வாழ்வில் இப்போது இன்னொரு புரட்சி
ஏற்படலாயிற்று. தனிமையில் அமர்ந்து அல்லாஹ்வை வணங்குவதிலும் தம்மைச் சுற்றிலுமுள்ள
ஒழுக்க, வீழ்ச்சி, மார்க்கப்
பக்தியில்லாமை ஆகியன குறித்துச் சிந்திப்பதிலும் அவர்களின் கவனம் திரும்பலாயிற்று:
'என் சமூகத்து
மக்கள் சிலைகளை எப்படி வணக்கத்திற்குரிய கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அவர்கள் ஒழுக்க
ரீதியாக எந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டிருக்கின்றார்கள்! இவர்களின்
இறைவழிபாட்டின் பாதை எது? இந்தப்
பிரபஞ்சத்தின் படைப்பாளனை,
அதிபதியை
எவ்விதம் வணங்குவது? அவர்களுக்கு அதனை
எப்படி உணர்த்துவது?' என்றெல்லாம்
அவர்கள் தொடர்ந்து சிந்தித்து வந்தார்கள். இத்தகைய ஏராளமான சிந்தனைகளும், கேள்விகளும்
அவர்களின் உள்ளத்தில் தொடர்ந்து வட்டமிட்டு வந்தன. அவற்றைக் குறித்து அண்ணலார்
(ஸல்) அவர்கள் சதா சிந்தித்து வந்தார்கள்.
ஹிரா குகை
மக்கா நகரிலிருந்து மூன்று மைல் தொலைவில் 'ஹிரா' எனப்படும் குகை
ஒன்று இருந்தது. அண்ணலார் (ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அங்கு சென்று
தங்கிச் சிந்திப்பதிலும் இறைவழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். உண்ணவும் பருகவும்
தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்வார்கள். அவை தீர்ந்து போனவுடன் மீண்டும்
வீட்டிற்கு வந்து எடுத்துச் செல்வார்கள். அல்லது கதீஜா (ரலி) அவர்கள் கொண்டு வந்து
தருவார்கள்.
முதல் வஹீ - வேத வெளிப்பாடு
ஒருநாள் அண்ணலார் வழக்கப்படி ஹிரா குகையில் இறை வழிபாட்டில்
ஈடுபட்டிருந்தார்கள். அது ரமளான் மாதம். அப்போது திடீரென அல்லாஹ்வினால்
அனுப்பப்பட்ட வானவர் ஒருவர் அண்ணலாரின் முன்னால் தோன்றினார்கள். அந்த வானவர், வானவர்களிலெல்லாம்
மிக உயர்ந்த படித்தரமுடையவரும் இறைச்செய்தியைத் தொன்றுதொட்டு அவனது
திருத்தூதர்களிடம் கொண்டு சென்று சமர்ப்பித்து வருபவருமான ஜிப்ரீல் (அலை)
அவர்னளேயாவர். ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணலாரிடம் 'ஒதுவிராக!' என்று கூறினார்கள்.
அண்ணலார் (ஸல்) 'எனக்கு ஓதத் தெரியாதே!' என்று கூறினார்கள். இதனையடுத்து ஜிப்ரீல் (அலை) அவர்கள்
அண்ணலாரைப் பிடித்து, அவர்கள்
களைப்படையும் அளவிற்குக் கட்டியணைத்தார்கள். பின்னர் அண்ணலாரை விட்டு விட்டார்கள்.
மீண்டும் 'ஓதுவீராக!' என்று
கூறினார்கள். அண்ணலார் மீண்டும் அதே பதிலை தந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள்
மீண்டும் அண்ணலாரைக் கட்டியணைத்து நெருக்கினார்கள். பின்னர் விட்டுவிட்டு, 'ஓதுவீராக!' என்று மறுபடியும்
கூறினார்கள். அண்ணலார் 'எனக்கு ஓதத்
தெரியாதே' என்று
கூறினார்கள். இப்போது மூன்றாம் முறையாகக் கட்டியணைத்துப் பின்னர்
விட்டுவிட்டார்கள். பிறகு பின்வருமாறு ஓதினார்கள்:
'உறைந்த
ரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்த உம் அதிபதியின் திருப்பெயரைக் கொண்டு
ஓதுவீராக! ஓதுவீராக! மேலும் எழுதுகோலைக் கொண்டு கற்பித்த உமதிறைவன் மேன்மை
மிக்கவன், அவன்
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்'. (96: 1- 5)
இதுதான் முதலாவது தேவ வெளிப்பாடாகும். அண்ணலார் (ஸல்) இந்த
நிகழ்ச்சிக்குப் பிறகு தமது இல்லத்திற்குச் சென்றார்கள். அச்சமயம் அவர்கள்
ஒருவிதமான நடுக்கத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களிடம் 'எனக்குப்
போர்த்துங்கள்', 'எனக்குப்
போர்த்துங்கள்' என்று கூறினார்கள்.
அவர்கள் மீது கம்பளி போர்த்தப்பட்டது. சற்று அமைதியடைந்தவுடன் அண்ணலார் கதீஜா
(ரலி) அவர்களிடம் நடந்தவை அனைத்தையும் விவரித்துவிட்டு 'என் உயிர்
ஆபத்திலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது' என்று கூறினார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள், 'இல்லை, ஒருபோதுமில்லை.
உங்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. இறைவன் உங்களை இழிவுக்குள்ளாக்க மாட்டான்.
நீங்கள் உறவினர்களை உரிமைகளைப் பேணுகின்றீர்கள். பிற மக்களின் சுமைகளை நீங்கள்
தாங்கிக் கொள்கின்றீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவுகின்றீர்கள். பயணிகளை
உபசரிக்கின்றீர்கள். நீதியை நிலைநாட்டுகின்றீர்கள். மக்களின் துயரங்களை நீக்கப்
பாடுபடுகின்றீர்கள்' என்று ஆறுதல் கூறினார்கள்.
அதன் பின்னர் கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை
அழைத்துக் கொண்டு வரகா பின் நவாஃபல் ஒரு வயது முதிர்ந்த மார்க்கப்பற்று மிக்க
கிறிஸ்தவராவார். இவர் தவ்ராத் வேத விற்பன்னர். கதீஜா (ரலி) அவர்கள் அப்பெரியவரிடம்
நடந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். இவற்றைச் செவியுற்ற வரகா 'அவர்
மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதே (மறைவான உண்மைகளை அறிந்த) வானவர் ஆவார்.
அந்தோ! (முஹத்ததே) உங்களை உங்கள் சமூகத்தார் இந்நகரை விட்டு வெளியேற்றும்போது நான்
உயிரோடு இருக்கக் கூடாதா!' என்று பெரு முச்சுசிட்ட வண்ணம் கூறினார்.
அண்ணலார் வியப்புற்று 'என்ன, எனது சமூகம் என்னை
வெளியேற்றிவிடுமா!' என்று வினவினார்கள். அதற்கு அப்பெரியவர் 'ஆம்!
நீர் கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தியை இதற்கு முன் கொண்டு வந்த எந்த
மனிதரையும் அவரது சமூகத்தார் பகைத்தே வந்திருக்கினறார்கள். நான் அந்த நேரத்தில்
உயிருடனிருந்தால் உங்களுக்குத் துணைபோவேன்' என்று கூறினார். இதற்குச் சில
நாட்களுக்குள்ளயே வரகா இறையடி சேர்ந்துவிட்டார்.
இதன் பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகை நின்றுபோய் விட்டது.
அண்ணலார் (ஸல்) அவர்கள் எப்போதும் போல் ஹிரா குகைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
இந்த இடைவெளி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் நீடித்தது. இந்த இடைவெளியின் பயனாக ஒரு
மனிதர் என்னும் ரீதியில் அண்ணலாரின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த தீடீர் தாக்கங்கள்
நீங்கிவிட்டன. அண்ணலாரின் புனித உள்ளம் மீண்டும் வேத வெளிப்பாடு இறங்குவதை ஆவலுடன்
எதிர்பார்க்கத் தொடங்கியது. இந்த இடைவெளி சற்று நீண்டவுடன் அண்ணலாருக்கு அமைதியும்
ஆறுதலும் அளித்திட ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவ்வப்போது வருகை தந்தார்கள். 'நிச்சயம் தாங்கள்
இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டீர்கள். தாங்கள் அமைதியுடன்
எதிர்பாருங்கள்' என்று ஆறுதல்
கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொடர்ந்து வர
ஆரம்பித்தார்கள்.
வஹியின் வகைகள்
நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி
பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின்
வகைகள் பற்றி இப்னுல் கய்''
(ரஹ்) 'ஜாதுல் மஆது' என்ற தனது நூலில்
கூறுவதாவது:
1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை
செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ்
(ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க
மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள்.
உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம்.
ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே
தவிர வேறு வகையில் அடைய முடியாது.''
3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம்
பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான
சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.
4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்)
அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக்
கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும்.
அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே
தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித்
(ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத்
துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.
5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்
தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு
முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் 'அந்நஜ்ம்' என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து
பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்' தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!
7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை)
அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி
குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது
என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது. (ஜாதுல் மஆது)
No comments:
Post a Comment